மணதை வருடிய 'சில்லு கருப்பட்டி"-திரை விமர்சனம்


மதிப்பு-3.7/5

குப்பை மேடையும் அதை தோண்டிப் பொருட்கள் தேடும் சிறுவர்களின் வாழ்க்கையையும் மிகையின்றி சொல்கிறது, முதல் கதை பிங்க் கலர் பேக்கைக் கண்டதும் ஓடி அள்ளிக்கொள்வது, ஷாம்பு கேட்ட தோழிக்காக, அதை ஆசையாகக் கொண்டு வருவது, அங்கு கிடைக்கும் வைரமோதிரத்தை, டேப் ரெக்கார்டரில் கட்டியபடி இடுப்பைப் பிடித்துக்கொண்டு அலைவது என குப்பைக்கார மாஞ்சாவாக ஈர்க்கிறார் ராகுல். அவரோடு வரும், அந்த பொடியனின் டயலாக் டெலிவரியும் நடிப்பும் ஆஹா.
இரண்டாவது கதையில், கட்டி, கேன்சராகலாம் என்றதும் முழுவதுமாக உடைந்து போகும் மணிகண்டன், இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடன் காரை ஷேர் பண்ணும் நிவேதிதா சுரேஷ் அத்தனை அழகு. மனக்கஷ்டத்தில் இருக்கிறார் என்பதைத் புரிந்துகொண்டு, அவராகப் பேச்சுக்கொடுத்து, வாழ்க்கை வெறுத்துப் போனவனின் வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்பதும் அதற்கான உரையாடலும் சுகமான ரசனை.
வயதானவர்களின் பிரச்னையை காதலோடு சொன்ன விதத்தில் மூன்றாவது கதையின் சுவாரஸ்யம்தான். தனிமையில் அவதிபடும் லீலா சாம்சன், அவருக்கு ஆதரவு கரம் கொடுக்கும் ஶ்ரீராம் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள்.
நான்காவது கதையில் சுனேனாவும் சமுத்திரக்கனியும். மெஷின்போல மூன்று குழந்தைகளைப் பெற்றுவிட்டாலும் அன்புக்கு ஏங்கும் சுனேனா, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் கணவனுக்கு வகுப்பெடுக்கும் ஆவேசம், தன் உணர்வுகளையும் ஆசைகளையும் புரிய வைக்கும் லாவகம் என இதில் வேறொரு முகம் காட்டுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் உலகமறிந்து மாறும் கணவர் சமுத்திரக்கனி கச்சிதம்.
ன்கு கதைகளுக்கும் நான்கு விதமாக ஒளிப்பதிவு செய்து கவனிக்க வைக்கிறார்கள் நான்கு ஒளிப்பதிவாளர்களும். பிரதீப் குமாரின் பின்னணி இசையும் அழகாகக் கதைச்சொல்லி இருக்கிறது.

படத்தின் பலம், ரசனையான உரையாடல்கள். அதுவே ஒரு கட்டத்தில் 'பேசிட்டே இருக்காங்கப்பா' என்று சொல்ல வைப்பதையும் தவிர்க்க முடியவில்லை. மணிகண்டன், நிவேதா எபிசோடில் சினிமாத்தனமான இறுதிக் காட்சி, அதிக அறிமுகமில்லாத லீலா சாம்சனிடம் ஶ்ரீராம் முத்த விஷயம் பேசுவது என சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும், இந்தச் சில்லுக் கருப்பட்டியின் வெற்றி நிச்சயம்...

Comments