3.5/5
வீட்டை மகனுக்கு எழுதி கொடுத்துவிட்டு வீட்டுக்காவலாளி வேலை பார்க்கிறார் கருப்பசாமி. ஒரு விபத்தில் அவருக்கு இடுப்பு உடைந்து விடுகிறது. அவரது தங்கையும் தங்கையின் தங்க மகன்களும் அவரைத் தாங்க நினைக்கிறார்கள். ஆனால் கெளரவம் கருதும் கருப்பசாமியின் மகன் அவரை தனது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறான். ஆனால் கருப்பசாமிக்கு எந்த ட்ரீட்மெண்டும் பார்க்காமல் விடுகிறான். ஒரு கட்டத்தில் கருப்பசாமி இறந்து போனார் என்ற செய்தியை மகன் போன் பண்ணி தன் அத்தை வீட்டுக்கு தகவலாகச் சொல்கிறான். தாய்மாமன் மீது பாசம் கொண்ட ஒரு மருமகன் கருப்பசாமி கருணைக்கொலைச் செய்யப்பட்டார் என்ற விசயத்தைக் கண்டு பிடிக்கிறார். அதன்பின் படம் நெடுக பல அதிர்ச்சித் தரக்கூடிய விசயங்கள் அரங்கேறுகின்றன. இதை 90 நிமிட சினிமாவாக்கி இருக்கிறார் பிரியா கிருஷ்ணசாமி.
நடிகர்கள் ராஜு, சுகுமார் சண்முகம், சு.பா. முத்துக்குமார், ஜெயலட்சுமி, ஸ்டெல்லா கோபி, சமராஜா, பிரேம்நாத், நட்ராஜ், நந்தினி ஆகியோர் பாரத்தை தங்கள் நடிப்பால் பலமாக தாங்கி இருக்கிறார்கள்.
மனிதனுக்குள் இருக்கும் அடிப்படை அம்சமே அன்பு தான். அந்த அன்பை இயலாத நேரத்தில் தனக்காக ஓடாக தேய்ந்த தாய்க்கும் தந்தைக்கும் எந்த நிலையிலும் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். அப்படி செலுத்தாதவர்கள் மனித லிஸ்டில் எப்படி வர முடியும்? இப்படியான கேள்வியை பாரம் மிக காத்திரமாக முன் வைத்துள்ளது.
உலகம் முழுதும் இந்தக் கருணைக்கொலைகள் நடைபெற்று வருகின்றன. இது உடனடியாக களையப்பட வேண்டிய அவசர அவசியம் என்பதை எந்த கமர்சியல் வசியமும் இல்லாமல் பாரம் பேசி இருக்கிறது. பாரமின்றி ஆரத்தழுவிக் கொள்வோம்.

Comments
Post a Comment