கொரோனா பாதிப்பால் திரைத்துறையே ஸ்தம்பித்துள்ள நிலையிலும் ‘அவதார் 2’ படத்தை சொன்ன தேதியில் வெளியிட தீவிரம் காட்டி வருகிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலா சாதனையையும் இந்த படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புகளால் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்த அவதார் 2 படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும் ஏற்கனவே முடிக்கப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் மீதான கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்டவற்றிற்கு பணியாளர்களை வீட்டிலிருந்தே தயார் செய்யுமாறு கூறியுள்ளாராம் ஜேம்ஸ் கேமரூன்.
இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ல் வெளியாவதாக முன்னரே அறிவித்திருந்த ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ”உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடக்கம் கண்டுள்ளன. நியூஸிலாந்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அவதார் 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும்” என உறுதிபட தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.

Comments
Post a Comment